by Staff Writer 10-07-2021 | 2:58 PM
Colombo (News 1st) கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்காக 420 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால இழப்பீடு மற்றும் அரசின் பங்களிப்பில் இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
இடைக்கால இழப்பீட்டில் மீனவர்களுக்காக 200 மில்லியன் ரூபா பணத்தை கப்பல் நிறுவனம் வழங்கியுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
இந்த நிதிக்கு மேலதிகமாக மேலும் 220 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, கப்பல் விபத்திற்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதனிடையே, கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்த 200-க்கும் அதிகமான கடலாமைகளின் உடல்கள் இதுவரை கரையொதுங்கியுள்ளன. 20-க்கும் அதிகமான டொல்பின்களும் 6 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கப்பலின் உள்நாட்டு நிறுவன நிர்வாகத்தினர் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் சட்டத்தின் கீழ், தண்டனை சட்டக்கோவையிலுள்ள சரத்துக்களின் கீழ் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.