தமிழகத்தில் 19 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு

தமிழகத்தில் 19 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு

by Bella Dalima 10-07-2021 | 5:52 PM
Colombo (News 1st) தமிழகத்தில் அமுலிலுள்ள ஊரடங்கு இம்மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு நாளை மறுதினம் 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணியுடன் முடிவடையவிருந்த நிலையில், 19 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். தமிழகத்தின் தற்போதைய கொரோனா தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு, ஊரடங்கை நீடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலதிக தளர்வுகள் வழங்கப்படுவதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், வர்த்தக நிலையங்களைத் திறந்திருப்பதற்கு மேலதிகமாக ஒரு மணித்தியாலம் வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகள், வெதுப்பகங்கள், நடைபாதைக் கடைகள் ஆகியவற்றை 50 வீதமான வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை திறப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், புதுச்சேரிக்கான பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துப் பரீட்சைகளை, சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், திரையரங்குகளைத் திறப்பதற்கான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தவிர ஏனைய மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்திற்கும் அனுமதியளிக்கப்படவில்லை. பாடசாலைகள், கல்லூரிகள், மதுவருந்தும் நிலையங்கள், நீச்சல் தடாகங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கும், பொதுமக்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களையும், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகளையும் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.