COVID கட்டுப்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன

by Staff Writer 10-07-2021 | 2:06 PM
Colombo (News 1st) நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் அமுலாகும் வகையில் மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் வௌியான புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றினால் மூடப்பட்டிருந்த வழிபாட்டுத்தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தவிர, திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மண்டபத்தின் ஆசன எண்ணிக்கையில் 25 வீதம் அல்லது அதிகபட்சமாக 150 பேரின் பங்குபற்றுதலுடன் திருமண நிகழ்வை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கருத்தரங்குகள், செயலமர்வுகளை அதிகபட்சமாக 50 பேருடன் நடத்துவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சைகளை நடத்துவதற்கும் புதிய சுகாதார வழிகாட்டல்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையங்களில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், நீச்சல் தடாகங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தவிர, சிகையலங்கார நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படவுள்ளன. நூலகங்கள் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் திறக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் கெசினோ, இரவு நேர களியாட்ட விடுதிகள் மற்றும் சூதாட்ட நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன. அத்துடன், பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் ஏற்கனவே வௌியிடப்பட்ட வழிகாட்டல்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு குறித்த தளர்வுகள் செல்லுபடியாகாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.