வலுவடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி: 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும்

வலுவடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி: 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும்

வலுவடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி: 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும்

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2021 | 2:32 pm

Colombo (News 1st) தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைந்துள்ளதால் நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளை – தொலஸ்பாகே – வின்டர்பொரஸ்ட் பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பலத்த மழை காரணமாக களு கங்கை பெருகெடுத்துள்ளாதால், இரத்தினபுரி நகரில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இரத்தினபுரி , எலபாத்த பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நேற்றிரவு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபொத்தாகம குறிப்பிட்டார்.

அபாயமிக்க பகுதிகளிலிருந்து வௌியேறுமாறு கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக அறிவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில், வௌ்ளம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும், அதற்கேற்ப முன்னாயத்தங்களுடன் இருப்பதாகவும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபொத்தாகம தெரிவித்தார்.

பலாங்கொடை – மெந்தகந்த பகுதியில் வீசிய பலத்த காற்றினால் மரமொன்று லயன் குடியிருப்பு மீது உடைந்து வீழ்ந்துள்ளது.

பலத்த மழையினால் குக்குளே கங்க நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் புலத்சிங்கள மோல்காவ வீதி நீரில் மூழ்கியுள்ளது.

புசல்லாவை – சோகம தோட்டத்தின் மேல் மற்றும் கீழ் பிரிவுகளுக்கு செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

கண்டி – கலாபொக்க தோட்டத்தை ஊடுருவி வீசிய பலத்த காற்றினால் மரமொன்று மின் கம்பத்தில் வீழ்ந்துள்ளதுடன், அப்பகுதிக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் புசல்லாவை பகுதியில் பல இடங்களில் பாரிய மண்சரிவுகள் பதிவாகியுள்ளன.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் நோர்ட்டன் பிரிட்ஜ் வீதியின் போக்குவரத்து முற்றாக மூடப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

ஹட்டன் – குடாகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழந்ததில், வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பலத்த மழையினால், இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயமேற்படவில்லை என எமது செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, சீரற்ற வானிலையால், கடவள கீழ் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

ஹற்றன் – கொழும்பு வீதியின் யட்டிபேரிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால், குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாற்று வீதியை பயன்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை, லிந்துலை, வட்டகொட பிரதேசங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது

நல்லதண்ணீர் – மஸ்கெலியா பிரதான வீதியில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன.

பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் கிக்கிரிவத்த பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால், அப்பகுதிக்கான போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களினி, கிங், நில்வளா கங்கைகளின் தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ள நிலைமை ஏற்படலாம் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், இரத்தினபுரி மாவட்டதின் குருலுவான பகுதியில் அதிக மழைவீழ்ச்சியாக 271.2 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

சீரற்ற வானிலையால், காலி, களுத்துறை, கேகாலை, கண்டி, மாத்தறை, கொழும்பு , நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவிற்கும், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்கும், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, அகலவத்த, புலத்சிங்கள, வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, அக்குரெஸ்ஸ , முலட்டியன பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன பிரதேச செயலாளர் பிரிவிற்கும் முதல் நிலை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவிற்கும் காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவிற்கும் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரள, பஸ்பாகே கோரள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்டை, ருவன்வெல்ல, புலத்கொஹூபிட்டிய மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரத்தினபுரி மாவட்டத்தின், எஹலியகொட, கஹவத்த, குருவிட்ட, இரத்தினபுரி, நிவித்திகல மற்றும் கலவான, இம்புல்பே, அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்