தனிமைப்படுத்தல் என்பது தடுப்புக்காவல் முறைமை அல்ல: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்

by Staff Writer 10-07-2021 | 6:50 PM
Colombo (News 1st) அரசியலமைப்பின் 14 (1) கோவையூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் உரிமைகளை சுகாதார நலன்களுக்காக வரையறுக்க முடியுமாக இருந்தாலும் அதனை சட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்க முடியும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. வரையறைகள் ஊடாக உறுதி செய்ய எதிர்பார்க்கப்படும் நோக்கங்களுக்காக அவை செயற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அந்த வரையறைகள் நியாயமாக இருக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறித்த விடயங்களை வலியுறுத்தியுள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்தல், தனிமைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கடிதம் நேற்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவால் PMD/PR/845/21-இன் கீழ் 2021 ஜூலை 06 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தின் பின்னரே கைதுகள் இடம்பெறுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் DDG(PHS)1/DO2/7/13/2017/20-இன் கீழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட மேற்கோள்காட்டல் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் குறித்த கடிதம் எந்த திகதியில் வெளியிடப்பட்டது என்பதை பொலிஸார் பகிரங்கப்படுத்தவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் அந்த ஊடக அறிக்கையில், பொதுமக்கள் பாரியளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை விடுக்கப்பட்டுள்ள போதிலும் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை முழுமையாக தடை செய்யுமாறு அது அர்த்தப்படுத்தவில்லை என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் தடை செய்யப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு ஆர்ப்பாட்டமும் பொதுமக்களின் சுகாதார நலனை பாதிக்காத வண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பேரணி மற்றும் அதற்கு இணையான செயற்பாடுகளில் பங்கேற்க நினைப்போர் தம்முடைய மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும் எனவும் நம்புவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. எனினும், முன்பு விதிக்கப்பட்ட வரையறைகளை தளர்த்துதல் சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ள பின்புலத்தில், பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக கடும் அதிகாரத்தை பிரயோகித்து செயற்படுவதில் நியாயமான காரணம் இருப்பதாக தாம் நம்புவதற்கில்லையென சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டமை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களை அவர்களின் விருப்பமின்றி சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின்றி பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு கொண்டு சென்றுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது COVID-19 தொற்றுக்குள்ளான நபரோ அல்லது அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ தனிமைப்படுத்தல் நிலையங்களை விட வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ தனிமைப்படுத்தப்படும் பின்புலத்தில் எடுக்கப்படும் பிரச்சினைக்குரிய பலவந்தமான தனிமைப்படுத்தல் செயற்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. COVID-19 தொடர்பாக கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு மாத்திரமே தனிமைப்படுத்தல் பொருத்தமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வேறு எவருக்கும் தனிமைப்படுத்தல் பொருந்தாது என்பதுடன், தெளிவாக தனிமைப்படுத்தல் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையாக அல்லாமல் தண்டனை அல்லது தடுத்து வைத்தல் நடவடிக்கையாக பயன்படுத்தக்கூடாது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சுகாதார விதிகள் மற்றும் வழிகாட்டல்களை COVID-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாத்திரம் பயன்படுத்துவதனை உறுதிப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பிணையில் விடுவிக்கப்படுவோரை பலவந்தமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுத்தல், பலவந்தமானது மற்றும் சட்டவிரோதமானது என்பதுடன், குறித்த செயற்பாடு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை அவமதிக்கும் விடயம் என்பதே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடாகும். அத்தகைய செயற்பாடுகள் காரணமாக சுகாதார உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொலிஸாரால் COVID-19 தடுப்பிற்காக எடுக்கப்படும் உண்மையான முயற்சிகளுக்கும் வெறுக்கத்தக்க பலன்களை கொடுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அமைதியாக எதிர்ப்பை வெளியிடும் உரிமையை பயன்படுத்துவோரை கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கும் படி பொலிஸாருக்கு ஆலோசனை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரை கோரியுள்ளது.

ஏனைய செய்திகள்