சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: நால்வருக்கு பிணை

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: நால்வருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

by Staff Writer 09-07-2021 | 5:49 PM
Colombo (News 1st) 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நால்வர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர், விசேட வைத்திய நிபுணர், செல்வந்த வர்த்தகர்கள் இருவரே கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கோ அல்லது சாட்சியாளர்களுக்கோ எவ்வித இடையூறும் விளைவிக்கக் கூடாதென கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில், தலா 25,000 ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான 8 சரீரப் பிணைகளிலும் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த நால்வர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நிறைவடைந்ததாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டதாலும், அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது ஏற்புடையதல்ல என அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்ததாலும் நீதவான் அவ்விடயங்களை பரிசீலித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.