by Staff Writer 09-07-2021 | 5:40 PM
Colombo (News 1st) உயர் கல்வி நிமித்தம் வௌிநாடு செல்வதற்காக கொரோனா ஒழிப்பு செயலணியில் பதிவு செய்த மாணவர்களுக்கு நாட்டிற்கு கிடைத்த Pfizer தடுப்பூசிகளை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராணுவ வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சில வௌிநாட்டு பல்கலைக்கழகங்கள், மாணவர்களுக்கு Pfizer தடுப்பூசியை மாத்திரம் செலுத்தியிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதனால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு Pfizer தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
ஏனைய Pfizer தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்திலுள்ள கரையோர பகுதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.
இதனடிப்படையில், மன்னார் மாவட்டத்தில் இன்று Pfizer தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில், அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தலைமன்னாரில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
நாளை (10) பேசாலை, வங்காலை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் தெரிவித்துள்ளார்.