by Staff Writer 09-07-2021 | 6:04 PM
Colombo (News 1st) செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் சனத்தொகையில் அதிக சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கும் விரிவான திட்டமொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்வைத்துள்ளார்.
இதனடிப்படையில், தொற்று பரவும் ஆபத்துமிக்க பகுதிகளை அடையாளம் கண்டு, அந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஜூலை மாதத்திற்குள் கிடைக்கும் தடுப்பூசிகளை குறித்த மாவட்ட மக்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் COVID ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதன்போது, நாளை மறுதினம் கிடைக்கவுள்ள 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளை மேல் மாகாணத்திற்கு பிரித்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கு 2 இலட்சம் தடுப்பூசிகளையும் கம்பஹா மாவட்டத்திற்கு 5 இலட்சம் தடுப்பூசிகளையும் களுத்துறை மாவட்டத்திற்கு 5 இலட்சம் தடுப்பூசிகளையும் ஒதுக்கீடு செய்து, இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகளும், குருநாகல் மாவட்டத்திற்கு இரண்டு இலட்சம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசிகளை முறையாகவும் விரைவாகவும் வழங்க வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி சுகாதாரத் துறையினருக்கு எடுத்துரைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில், 1.47 மில்லியன் AstraZeneca தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.
இவற்றில் 6 இலட்சம் தடுப்பூசிகள், ஏற்கனவே முதலாவது டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன.
எஞ்சிய தடுப்பூசிகள் கேகாலை மாவட்ட மக்களுக்காக, முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கென ஒதுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள Pfizer தடுப்பூசிகளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் Moderna தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்திற்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.