இரண்டு அமைச்சுகளின் விடயதானங்கள் திருத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 09-07-2021 | 2:52 PM
Colombo (News 1st) நிதி அமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கம் ஆகிய அமைச்சுகளின் விடயதானங்கள் மேலும் திருத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய, நிதி அமைச்சின் கீழ் இருந்த பௌத்த மத மறுசீரமைப்பு நிதியம், புத்த சாசன நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதியம் ஆகியன நேற்று (08) ஸ்தாபிக்கப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராகவும் பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராகவும் நேற்று பதவிப்பிரமாணம் செய்தனர். அவர்களுக்குரிய அமைச்சுகளின் விடயதானங்கள் மற்றும் பொறுப்புக்களை ஜனாதிபதி நேற்று முன்தினம் அதிவிசேட வர்த்தமானியில் அறிவித்தார். இந்த வர்த்தமானிக்கு அமைய, புத்தசாசன நிதியம், பௌத்த மறுமலர்ச்சி நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன நிதி அமைச்சின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும், நேற்று ஜனாதிபதியால் மீண்டும் விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் புத்த சாசன நிதியம், பௌத்த மறுமலர்ச்சி நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன பிரதமரின் கீழ் இயங்கும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நேற்று முன்தினம் விடுக்கப்பட்ட வர்த்தமானியில் நிதி அமைச்சர் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டங்களில் உள்நாட்டு இறைவரி சட்டம் 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய வர்த்தமானியில் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டம் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்