நாட்டின் பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்: 40-இற்கும் மேற்பட்டோர் கைது

by Staff Writer 08-07-2021 | 8:25 PM
Colombo (News 1st) பல்வேறு காரணிகளை முன்வைத்து இன்று நாட்டின் பல பதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற 40-இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்து இடம்பெற்ற போராட்டத்தை இலவசக் கல்விக்கான மாணவர் அமைப்பு உள்ளிட்ட சில தரப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சுமத்தி அங்கிருந்தவர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். சிவில் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டு, தலங்கம மற்றும் மிரிகென பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை இன்று மாலை புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். நீதிமன்றத்தால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர்களை தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்ல பொலிஸார் முயற்சித்த போது மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது. இதேவேளை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உரம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி இன்று மாத்தறை - அக்குரஸ்ஸ பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதன்போது, 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஹட்டன் நகரில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக, நுகேகொடையில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. கேகாலை நகரிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், பொலிஸாரின் அறிவுறுத்தலை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை, பொலிஸாரின் தலையீட்டை அடுத்து நிறுத்தப்பட்டது. பாணந்துறை நகரிலும் ஆர்ப்பாட்டம்மொன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை, மாத்தளை, பிலிமத்தலாவை, சிலாபம், இரத்தினபுரி மற்றும் பதுளை நகர்களிலும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டது. ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்து அமைதியின்மை ஏற்பட்டது. கலந்துரையாடலுக்காக சுகாதார அமைச்சுக்கு தம்மை அழைத்து கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தேரர் குற்றஞ்சாட்டினார். இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு முன்னெடுக்கப்படும் விடயங்களை முன்நிறுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுமார் ஒரு மணித்தியாலம் தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.