மக்களின் பிரச்சினைகளை மறைப்பது கேலிக்குரியது: ஐதேக

ஊடக அடக்குமுறை மூலம் மக்களின் பிரச்சினைகளை மறைக்க நினைப்பது கேலிக்குரியது: ஐ.தே.க அறிக்கை

by Staff Writer 07-07-2021 | 8:28 PM
Colombo (News 1st) ஊடக அடக்குமுறை மூலம் மக்களின் பிரச்சினைகளை மறைக்க முடியும் என நிர்வாகிகள் நினைத்தால், அது கேலிக்குரிய விடயம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 2005 - 2015 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சிரச ஊடக வலையமைப்பிற்கு குண்டுத் தாக்குல் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளை அச்சமின்றி நேரடியாக எடுத்துக்கூறும் சிரச ஊடக வலையமைப்பு தொடர்பில் தற்போது அரசாங்கத்திற்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளாமல் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஊடக சுதந்திரத்தை சர்வாதிகார ஆட்சியாளர்கள் இல்லாமல் செய்துள்ள போதிலும், மக்களினால் அந்த முயற்சி இறுதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறான முயற்சியை அரம்பத்திலேயே தோற்கடிப்பது இந்த நாட்டின் ஜனநாயக சக்திகளின் பொறுப்பு என அவ்வமைப்பின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து ஜனநாயக அமைப்புக்களும் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்