தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அரசியல் செயற்பாட்டாளர்கள் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய அரசியல் செயற்பாட்டாளர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2021 | 8:52 pm

Colombo (News 1st) நாட்டின் பல பாகங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் மஹிந்த ஜயசிங்க, நாமல் கருணாரத்ன, சமந்த வித்யாரத்ன மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட தரப்பினர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொதுமக்கள் பாரியளவில் ஓரிடத்தில் ஒன்றுகூடும் வகையில், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மறு அறிவித்தல் வரை நடத்தப்படக்கூடாது எனும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பிரகாரம், பொலிஸார் செயற்பட்டதை அடுத்தே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

முத்துராஜவெல சேற்றுநிலத்தை அண்மித்த காணியொன்றை நிரப்பி மின் பிறப்பாக்கல் செயற்றிட்டத்திற்கு பயன்படுத்த தயாரானமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட சிலர் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டம் குறித்து நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த பொலிஸார், போப்பிட்டி நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கலைப்பதற்கு முயற்சித்தனர்.

அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து வௌியேறி பேரணியாக ஜா எல நகரை சென்றடைந்தனர்.

நகரை அண்மித்த போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். பொலிஸாரின் சேவைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மஹிந்த ஜயசிங்க, ஜா எல நகர சபை உறுப்பினர் ஒருவரும் கம்பஹா மாவட்டத்தின் சாரணர் அணியின் உறுப்பினர் ஒருவரும் இதன்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று பிற்பகல் வத்தளை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்

கைது செய்யப்பட்ட மூவருக்கும் நாளை PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்து முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட தரப்பினர் இன்று அந்தத் திணைக்களத்தின் முன்பாக அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சம்பளத் தாமதம், கொடுப்பனவுகள் மற்றும் சேமலாப நிதியத்திற்கு பணம் வைப்பிலிடப்படாமை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் 9 ஊழியர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கட்டடத் தொகுதியின் முன் பகுதியில் இருந்து அகன்று செல்லுமாறு பொலிஸார் பல தடவைகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்தனர். இதனையடுத்து, துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரயைும் தலா 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, முன்னிலை சோசலிசக் கட்சியினால் களுத்துறையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் பொருட்கள் விலை அதிகரிப்பிற்கு நிவாரணம் அளிக்குமாறு வலியுறுத்தியும் செல்வந்தர்களிடம் வரி அறவிடுங்கள் எனும் கோரிக்கையுடனும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் அங்கு வந்த களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர்.

கடந்த முதலாம் திகதி தனிமைப்படுத்தல் சட்டங்களை பொருட்படுத்தாமல் பொரளையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தால், மக்கள் விடுதலை முன்னணியின் சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன உள்ளிட்ட 5 பேர் போகம்பறை பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்ததை அடுத்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணை பிரகாரம், அவர்கள் 5 பேரையும் விடுவிக்குமாறு வெலிமடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்