பூபாலப்பிள்ளை பிரசாந்தன் பிணையில் விடுவிப்பு 

பூபாலப்பிள்ளை பிரசாந்தன் பிணையில் விடுவிப்பு 

by Staff Writer 06-07-2021 | 6:08 PM
Colombo (News 1st) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (06) பிணை வழங்குவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது. அதற்கமைய, 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபரை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வழக்குடன் தொடர்புடைய சாட்சியங்களுக்கோ அல்லது தடயங்களுக்கோ எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தக் கூடாது என சந்தேகநபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தொலைநகலூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பிரசாந்தன், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய, மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.