by Staff Writer 05-07-2021 | 8:06 PM
Colombo (News 1st) விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் விரிவான வேலைத்திட்டத்தை கூட்டுறவு இயக்கத்தினால் மேற்கொள்ள முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற 99 ஆவது சர்வதேச கூட்டுறவு தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
விவசாய உற்பத்திகளை நேரடியாக கொள்வனவு செய்து இலாபத்தை வைத்துக் கொண்டு கூட்டுறவு சங்கங்களால் மானிய விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் திறந்த பொருளாதாரக் கொள்கையால் பின்னடைவை சந்தித்த கூட்டுறவு இயக்கத்தை கட்டியெழுப்பி, பேரிடர் சந்தர்ப்பங்களில் பாரிய சமூகக் கடமையை நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் திட்டமிட்டுள்ள சேதனப் பசளை திட்டம் மற்றும் சூரிய சக்தி மின் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கூட்டுறவுத் துறை பாரிய பங்களிப்பை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் 112 நாடுகள் கூட்டுறவு இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதுடன் ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதம் முதலாவது சனிக்கிழமை சர்வதேச கூட்டுறவு தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.