சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்

by Staff Writer 05-07-2021 | 1:30 PM
Colombo (News 1st) 14 கோரிக்கைகளை முன்வைத்து 10 சுகாதார தொழிற்சங்கங்கள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் பொதுவான கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் பாரபட்சம் காட்டுவதன் காரணமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் ரவீ குமுதேஷ் தெரிவித்துள்ளார். இடைநிலை சுகாதார சேவைக்குரிய 10 தொழிற்சங்கங்களும் தங்களுடன் இணைந்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். ஆய்வுகூட நிபுணர்கள், பொது சுகாதார பரிசோதகர்களும் பகிஷ்கரிப்பில் இணைந்துள்ளனர். தாதியர்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதியால் தீர்வு வழங்கப்பட்டதை போல, தங்களின் கோரிக்கைக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும்என வலியுறுத்தி அடையாளப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரவீ குமுதேஷ் தெரிவித்தார். அதற்கமைய, இன்று (05) காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு, தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவம் என அவர் கூறினார். சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பால் வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்களும் இன்று பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.