ஆண்டின் முதல் காலாண்டில் கலால் வரி உள்ளிட்ட வரி வருமானத்தில் வீழ்ச்சி

by Staff Writer 04-07-2021 | 9:29 PM
Colombo (News 1st) இந்த வருடத்தின் முதல் காலாண்டில் விசேட பொருட்கள் வரி மற்றும் கலால் வரி உள்ளிட்ட வரி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் விசேட பொருட்கள் வரி 3.6 பில்லியன் ரூபாவினால் இந்த வருடத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் 24.1 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட விசேட பொருட்கள் வரி, இந்த வருடத்தில் 20.5 பில்லியன் ரூபா வரை குறைவடைந்துள்ளது. இவ்வாறு அரச வரி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற பாரிய மோசடியாகக் கருதப்படும் திறைசேரி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய சிலர் மீண்டும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வழியயேற்படுத்தப்பட்டுள்ளது. முறிகள் மோசடி தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட அர்ஜூன் அலோஷியஸூக்கு மதுபான உற்பத்திக்கு மீண்டும் அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் முறிகள் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகனாவார்.