நாட்டின் கடற்கரைகளில் திமிங்கிலம், டொல்பின்கள், கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன

by Bella Dalima 03-07-2021 | 4:50 PM
Colombo (News 1st) உயிரிழந்த திமிங்கிலமொன்றும் கடல் ஆமையொன்றும் பாணந்துறை - நல்லுருவ கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன. இரண்டு கடல்வாழ் உயிரினங்களும் அத்திடிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மேலதிக பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளன. சுமார் 9 அடி நீளமான திமிங்கிலம் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, கொஸ்கொட கரையில் கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது. இதேவேளை, புத்தளம் -ஆராய்ச்சிக்கட்டு, முத்துப்பந்தி கடற்கரையில் உயிரிழந்த கடலாமையொன்றும், டொல்பின் ஒன்றும் இன்று கரையொதுங்கியுள்ளது. சுமார் 3 அடி நீளமான கடலாமையும் சுமார் 7 அடி நீளமுள்ள டொல்பினும் கரையொதுங்கியதாக செய்தியாளர் தெரிவித்தார். நாட்டின் கடற்கரைகளில் இதுவரை 180 கடலாமைகளும் 20 டொல்பின்களும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த கடலாமைகளின் உடலில் எவ்வகையான இரசாயன பதார்த்தங்கள் காணப்படுகின்றன என்பதை கண்டறிவதற்காக, அவற்றின் உடல் மாதிரிகளை வௌிநாட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.