by Staff Writer 03-07-2021 | 5:20 PM
Colombo (News 1st) திஸ்ஸமஹாராம வாவியில் இடம்பெற்ற தூர்வாரும் நடவடிக்கையினால் தொல்பொருள் மரபுரிமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தின் விசேட குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
திணைக்களத்தின் தென் மாகாண அலுவலகத்தின் குழுவொன்று நேற்று (02) வாவியில் ஆய்வொன்றை மெற்கொண்டதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்தார்.
வாவியை தூர்வாரும் நடவடிக்கையின் போது, தொல்பொருள் மரபுரிமைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை தயாரித்து, வாவியை தூர்வாருவதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இந்த விசாரணை அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (05) தமக்கு கிடைக்கவுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சீன - இலங்கை கூட்டுத் திட்டத்தினூடாக திஸ்ஸமஹாராம வாவியின் சேற்று மணலை அகற்றும் நடவடிக்கை சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி பெறப்படாததால் அந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
கி.பி 33 - 43 காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வாவி நாட்டின் நீர்ப்பாசன பாரம்பரியத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.