தாதியர்களின் 5 பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதி இணக்கம்

தாதியர்களின் 5 பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதி இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2021 | 3:43 pm

Colombo (News 1st) மூன்று தாதியர் சங்கங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை 7 மணியுடன் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.

நேற்று (02) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்பட்டதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

1. தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்

2. நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் 2017 டிசம்பர் 07ஆம் திகதி மற்றும் 32/2017 ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் ஊடாக இடைநிறுத்தப்பட்ட பணிக்குழாம் நிலையை மீண்டும் வழங்குதல்

3. இடைநிறுத்தப்பட்டுள்ள வகுப்பு iii இலிருந்து வகுப்பு ii பதவி உயர்வை ஐந்தாண்டுகளிலும் வகுப்பு ii இலிருந்து வகுப்பு i பதவி உயர்வை ஏழு ஆண்டுகளிலும் வழங்குதல்

4. 20,000 ரூபா வருடாந்த சீருடைக் கொடுப்பனவை வழங்குதல்

5. தற்போதைய 36 மணிநேர வேலை நேரத்தை வாரத்திற்கு ஐந்து நாட்கள், அதாவது 30 மணித்தியால நேரமாகக் கருதுவதை விசேட குழுவொன்றின் ஆய்வுக்கு உட்படுத்தல்

ஆகிய ஐந்து விடயங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

10,000 ரூபா கொடுப்பனவு மற்றும் 2014 டிசம்பர் 24 ஆம் திகதியன்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை சம்பளத்தின் 1/100 மேலதிக சேவைக் கொடுப்பனவு ஆகியவற்றை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

அரச சுகாதாரத் துறை மீது அரசாங்கத்திற்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் தாதியர் சேவைக்கு கூடிய அங்கீகாரத்தை அளிப்பதாகவும் தாதித் தொழில் வல்லுநர்களுக்கு உரிய இடத்தை வழங்குவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளதால், இன்று முதல் மீண்டும் பணிக்கு திரும்புமாறு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தாதியர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, தமது சில கோரிக்கைகளை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால், அடுத்த வருடம் முதலே அவை நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் குறித்து திருப்தியடைய முடியாது என அரச தாதி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு தாதியர் சங்கத்துக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட 15,000 ரூபா இரவு விழித்திருத்தல் போக்குவரத்து மற்றும் விபத்துக் கொடுப்பனவை பெற்றுக்கொள்வது, உரிய செயற்பாட்டினுள் பதவி உயர்வு வழங்கல், சகல தாதியர் பாடசாலைகளையும் பல்கலைக்கழக பீடங்களாக தரமுயர்த்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் , அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் மற்றும் அனைத்திலங்கை தாதியர் சங்கம் என்பன ஒன்றிணைந்து 48 மணித்தியாலங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.

இதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையை மீறி தாதியர் சேவை சம்பந்தமாக தீர்மானங்களை எடுத்த காரணத்தால் பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

தாதியர் சங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அடிப்படை வழிமுறைகளை பின்பற்றாமல் தாதியர் தொழிற்சங்கத்தின் கோரிக்கையை நேரடியாக அமைச்சரவைக் குழுவிடம் கையளித்ததால், அரச சேவையினுள் பிரச்சினைக்குரிய சூழல் உருவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனால் பெர்னாண்டோ விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்