MTV நிறுவனத்திற்கு எதிராக  இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம் தீர்ப்பு

by Staff Writer 02-07-2021 | 2:07 PM
Colombo (News 1st) ஜோர்ஜ் ஸ்டுவர்ட் தனியார் நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீர அல்லது அதன் அதிகாரிகள் தொடர்பில் தகவல்கள் வௌியிடுவதை தடுக்கும் வகையில், MTV Channel தனியார் நிறுவனத்திற்கு விரிவான இடைக்கால தடையுத்தரவை விதிக்கும் கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிபதி அருண அளுத்கே இன்று நிராகரித்தார். பொதுமக்களின் சுகாதாரத்தில் தாக்கம் செலுத்தும் அல்லது அவர்கள் அக்கறை செலுத்தும் விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கும், உண்மையான விடயங்களின் அடிப்படையில் நியாயமாக விமர்சிப்பதற்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு உள்ள பொறுப்பு கைவிடப்பட முடியாதது என மாவட்ட நீதிபதி கூறினார். அவமதிக்கும் கருத்து, முரண்பாடாக அவமதிக்கும் கருத்து என்பவை நீதிமன்றத்திற்கு முன்பாகவும் தர்க்கரீதியான கேள்வியாக அமைவதாகவும், அந்த கேள்விக்கு பதில் தேடும் போது, சாதாரண நபரின் விசாரணைகளை பயன்படுத்தி , பிரச்சினைக்குரிய கருத்து முரண்பாடான கருத்தாக அமையுமா என்பது தொடர்பில் தீர்மானத்திற்கு வருவது நீதிமன்றத்திற்கும் இலகுவான விடயம் அல்ல எனவும் மாவட்ட நீதிபதி குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களாக நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், நீதிமன்றம் என்பன அமைவதுடன், நான்காவது தூணாக ஊடகம் சமூகத்தில் முன்னுரிமை பெற்றுள்ளதை நீதிபதி சுட்டிக்காட்டினார். இது அரசியலமைப்பின் கருத்து சுதந்திரம் தொடர்பான 14.1 சரத்தில் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். முறைப்பாட்டு நிறுவனத்தின் தலைவரான திலித் ஜயவீர அல்லது அதன் அதிகாரிகளை இந்த வழக்கின் தரப்பினராக உள்வாங்காமல், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான உரிமை இல்லையென பிரதிவாதி தரப்பினரான MTV Channel தனியார் நிறுவனம் இந்த வழக்கு விசாரணையின் போது முன்வைத்த தர்க்கத்தை மாவட்ட நீதிபதி ஏற்றுக்கொண்டார். முறைப்பாட்டு தரப்பாக அல்லாத, முறைப்பாட்டு நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீர மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பெறுவதற்கு மோசமான விதத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிபதி குறிப்பிட்டார். முறைப்பாட்டு தரப்பினர் கோரியுள்ள இடைக்கால தடையுத்தரவை விதிப்பதற்கு, சட்டத்தில் இடமில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். எனினும், முறைப்பாட்டு நிறுவனத்தினால் COVID-19 RAPID ANTIGEN பரிசோதனை தொகுதிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், விநியோகித்தல் தொடர்பில் மாத்திரம் எவ்வித அவமதிக்கும் செய்திகளையும் வௌியிட வேண்டாம் என இதன்போது உத்தரவிடப்பட்டது.