by Staff Writer 02-07-2021 | 4:43 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று சுகாதார பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 60 வீதமானோருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 47 வீதமானோருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 34 வீதமானோருக்கும் முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
முற்பதிவு செய்துள்ள தடுப்பூசிகள் கிடைக்கவுள்ள நிலையில், உரிய திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையானோருக்கு தடுப்பூசி வழங்குவது கட்டாயமானது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கொரோனா ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்டோருக்கு இரண்டாவது தடுப்பூசியை முறையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்ட ஒருவர் 45 வாரங்கள் வரை இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளதை, COVID ஒழிப்பு விசேட குழுவின் உறுப்பினர், விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை முதல் வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், குறுகிய காலப்பகுதியில் பெருமளவானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.