தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

by Staff Writer 02-07-2021 | 3:01 PM
Colombo (News 1st) மூன்று தாதியர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. நேற்று (01) காலை 7 மணி முதல் மூன்று தாதியர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து 48 மணித்தியால சுகவீன விடுமுறைப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தன. இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம், அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் மற்றும் அனைத்திலங்கை தாதியர் சங்கம் என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளன. 2015 ஆம் ஆண்டு தாதியர் சங்கத்திற்கு வழங்குவதாக இணக்கம் தெரிவிக்கப்பட்ட 15,000 ரூபா போக்குவரத்து மற்றும் விபத்திற்கான கொடுப்பனவைப் பெற்றுக்கொள்தல், உரிய செயற்பாட்டினுள் பதவி உயர்வு வழங்கல், சகல தாதியர் பாடசாலைகளையும் பல்கலைக்கழக பீடங்களாக தரமுயர்த்தல் ஆகியன தாதியர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் பிரதான நோக்கங்களாகும். தாதியர் தொழிற்சங்கம் முன்னெடுத்துள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரிதும் இன்னல்களுக்கு உள்ளாகினர். தேசிய வைத்தியசாலைக்கு குறைந்தளவிலானவர்களே வருகை தந்திருந்தனர். தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கியதுடன், ஏனைய வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய கண் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளிலும் தாதியர் தொழிற்சங்க நடவடிக்கை இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

ஏனைய செய்திகள்