by Staff Writer 02-07-2021 | 7:38 PM
Colombo (News 1st) சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் சமுத்திர வசதிகளை திட்டமிடல், மத்திய நிலையத்தின் பணிகளை ஆரம்பித்தல், பேராதனை போதனா வைத்தியசாலை முன்பாக சுரங்கப் பாதை மற்றும் அதிவேக வீதியின் கபுதுவ இடைமாறலை மக்கள் மயப்படுத்தல் என்பன இன்று நடைபெற்றன.
இந்த செயற்பாடுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் இருந்து இணையத்தளமூடாக முன்னெடுக்கப்பட்டன.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைச்சர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.
இரண்டு வருடங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்படும் சமுத்திர வசதிகள் திட்டமிடல் மத்திய நிலையத்தின் மதிப்பீட்டு செலவு 4999 மில்லியன் ரூபாவாகும்.
17 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடம் கொழும்பு லோட்டஸ் வீதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்படுகிறது.
இதனிடையே, 127 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பேராதனை போதனா வைத்தியசாலை முன்பாகவுள்ள சுரங்கப் பாதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று இணையத்தளமூடாக திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 445 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அதிவேக வீதியின் கபுதுவ இடைமாறல் பகுதியும் பிரதமரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அதிவேக வீதியில் 130 மைல்கல் பகுதியை அண்மித்து மாத்தறை - ஹக்மன வீதியின் கொழும்பு திசைக்கு பிரவேசித்தல் மற்றும் வௌியேறுதலுக்காக இந்த இடைமாறலை இன்று முதல் பயன்படுத்த முடியும்.