கோதுமை மா விலையை அதிகரிக்க அனுமதி இல்லை

கோதுமை மா விலையை அதிகரிக்க அனுமதி இல்லை: லசந்த அழகியவன்ன

by Staff Writer 02-07-2021 | 3:13 PM
Colombo (News 1st) கோதுமை மா விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள், சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்துடன் நேற்று (01) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இது குறித்து தௌிவுபடுத்தியதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், பாணின் விலையை அதிகரிக்காதிருப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கோதுமை மா விலையை அதிகரிப்பதற்கு செரண்டிப் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 18 ரூபாவால் அதிகரித்து விற்பனை செய்வது நியாயமற்றது எனவும் சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நிர்ணய விலைக்கமைய, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவை 87 ரூபாவிற்கே விற்பனை செய்ய முடியும். எனினும், செரண்டிப் நிறுவனம் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவை 107 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. வௌ்ளவத்தையில் அமைந்துள்ள செரண்டிப் நிறுவனத்தின் விநியோக நிலையமொன்று,நேற்று நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 18 ரூபாவால் அதிகரித்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, குறித்த விநியோக நிலையத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.