கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத் தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்

by Staff Writer 01-07-2021 | 8:30 PM
Colombo (News 1st) 1000 ரூபா சம்பளத்திற்காக 18 கிலோகிராம் தேயிலை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்துவதாக தெரிவித்து பொகவந்தலாவை - கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சிலர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 19 பேருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தோட்டத்தை தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. 1000 ரூபா சம்பள அதிகரிப்பு அறிவிக்கப்பட்ட நாள் முதல், மேலதிகமாக கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் நிபந்தனைகளை விதிப்பதாக தெரிவித்து கொட்டியாகலை கீழ் பிரிவு தொழிலாளர்கள் நேற்று (30) காலை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். நேற்றிரவு முழுவதும் அதே இடத்தில் தங்கியிருந்து இவர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற கொட்டியாகலை கீழ் பிரிவு தேயிலை தோட்டத்தொழிற்சாலையின் நுழைவாயிலுக்கு அருகே இன்று காலை சென்ற பொலிஸ் அதிகாரிகள், கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தனர். இதனால் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவித்த போதிலும் தொழிலாளர்கள் அதற்கு இணங்கவில்லை. கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தின் தொழிற்சங்க தலைவர்கள் இன்று தோட்ட முகாமையாளரை சந்தித்து இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாடியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். எனினும், 18 கிலோகிராம் தேயிலை பறிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்ட முகாமையாளர் நேரடியாக வந்து தமக்கு வாக்குறுதி வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர். எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் தீர்மானத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இன்று மாலை தொழிலாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர். இதேவேளை, பண்டாரவளை எல்ல பிரதேச செயலகப் பிரிவின் நியூபக் தோட்டத்தில் நேற்றும் இன்றும் தாம் பறித்த தேயிலை கொழுந்தை தோட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளதாக தொழிலாளர்கள் கூறினர். 18 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் கூறினாலும், வறட்சியான காலநிலை மற்றும் உர தட்டுப்பாடு காரணமாக மேலதிக கொழுந்தை பறிக்க முடியாதுள்ளதாக தொழிலாளர்கள் கூறினர். இன்று பறிக்கப்பட்ட கொழுந்தும் கீழே கொட்டப்பட்டு அதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு பகுதி மாத்திரமே தொழிற்சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக நியூபக் தோட்ட மக்கள் கவலை தெரிவித்தனர். தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்காகவே உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், மேலதிக கொழுந்தை பறிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. கூட்டு ஒப்பந்தம் இரத்தாகியுள்ளதால், அதிலுள்ள சரத்துக்கள் செல்லுபடியாகாது என சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை கூறியிருந்தார். எவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு கட்டாயம் 1000 ரூபா வழங்கப்பட வேண்டியது அவசியம் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி கூறினார். 1000 ரூபா சம்பளத்தை வழங்காவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் விடயமாக அமைந்துவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.