உர இறக்குமதிக்கு செலவாகும் 80,000 மில்லியன் ரூபாவை விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 01-07-2021 | 7:43 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இலங்கை தேசிய விவசாய சம்மேளத்தின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றது. சேதனப் பசளை பயன்பாட்டின் பின்னர் அரசாங்கத்தினால் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள செயற்றிட்டங்கள் குறித்து இதன்போது விவசாய பிரதிநிதிகளுக்கு தௌிவுபடுத்தப்பட்டது. இலங்கை தேசிய விவசாய சம்மேளனத்தில் 11 இலட்சம் விவசாயிகளும் 17,000 விவசாய சங்கங்களும் 563 விவசாய சேவை நிலையங்களும் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேதனப் பசளை இறக்குமதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தளர்த்த வேண்டாம் என விவசாய பிரதிநிதிகள் இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதுவரை பெற்றுக்கொண்ட வருமானத்தை இழக்க இடமளிக்க போவதில்லை எனவும், அவ்வாறு வருமானம் குறைவடையும் பட்சத்தில் அந்த வருமானத்தை அரசினூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். வருடாந்தம் இரசாயன பசளை இறக்குமதிக்கு செலவு செய்யும் 80,000 மில்லியன் ரூபாவை நாட்டின் அப்பாவி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்தப்பட்ட விவசாய காப்புறுதியை இன்று முதல் மீண்டும் அமுல்படுத்தும் வகையிலான காப்புறுதித் திட்டம் அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. விவசாய ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.