MV X-Press Pearl கப்பலின் இரசாயனக் கசிவே கடல்வாழ் உயிரினங்களின் இறப்பிற்கு காரணம்: நீதிமன்றில் அறிவிப்பு

by Staff Writer 30-06-2021 | 6:33 PM
Colombo (News 1st) MV X-Press Pearl கப்பலில் தீ பரவியதன் பின்னர் ஏற்பட்ட சூழல் பாதிப்புகளாலேயே கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 176 கடலாமைகளும் 20 டொல்பின்களும் 04 திமிங்கிலங்களும் கப்பலில் தீ பரவியதன் பின்னர் இரசாயன பொருட்கள் கடலில் கலந்ததால் உயிரிழந்துள்ளதாகவும் அவை சிலர் கூறுவதைப் போல் பருவநிலை மாற்றத்தால் உயிரிழக்கவில்லை எனவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 39 நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவினால் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். கால்நடை வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைக்கு அமைய, இரசாயனக் கசிவே கடல்வாழ் உயிரினங்களின் மரணத்திற்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார். இலங்கை கடற்பரப்பில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி தீ பரவிய கப்பல் தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த போது பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் இந்த விடயங்களை முன்வைத்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதி, நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளுக்கு கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தகவலை அழித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கூறினார். கப்பலின் கெப்டன் உள்ளிட்ட 25 ஊழியர்களிடமும் இருந்த கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்கள் மற்றும் ஏனைய தரவுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனூடாக ஏதேனும் குற்றச்செயல்கள் இடம்பெற்றமை உறுதி செய்யப்பட்டால், ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். தீ பரவ ஆரம்பித்தது தொடக்கம் அது குறித்து கப்பலின் கெப்டன் உண்மையான விடயங்களை இலங்கை அதிகாரிகளுக்கு தொடர்ந்து மறைத்துள்ளமையும் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் கூறினார். விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேலதிக நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

ஏனைய செய்திகள்