COVID-19 தொற்றை கட்டுப்படுத்த இதுவரை 262 பில்லியன் ரூபா செலவு

by Staff Writer 30-06-2021 | 7:49 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக இன்று தெரியவந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற நிதி அமைச்சின் மீளாய்வுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. நிதி அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் இதன்போது நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் இங்கு தெளிவுபடுத்தியுள்ளனர். வட்டி வீதத்தை குறைத்து, கடன் நிவாரணங்களை வழங்கி பணவீக்கத்தை 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக பேணுவதற்கு முடிந்ததாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே மாதம் பணவீக்கம் 6.1 சதவீதம் அல்லது 6.2 வரை அதிகரித்த போதிலும் அதனை குறைப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து இதுவரை அரசாங்கம் 11,000 அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.