இராணுவ சீருடையை ஒத்த ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்: பாதுகாப்பு செயலாளர் சீன தூதரகத்திற்கு அறிவிப்பு

by Staff Writer 30-06-2021 | 8:51 PM
Colombo (News 1st) திஸ்ஸமஹாராம வாவியை தூர்வாரும் திட்டத்தில் ஈடுபட்டிருந்த சீன பிரஜைகள் இராணுவ சீருடையை ஒத்த ஆடை அணிந்திருந்தமை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு நேற்று (29) மாலை தெளிவுபடுத்தியது. குறித்த சீன பிரஜைகள் சீன மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்தவர்கள் அலலவென இலங்கைக்கான சீன தூதரகம் குறிப்பிட்டதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம வாவியில் சேற்று மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சீன பிரஜைகள் அத்தகைய ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இலங்கைக்கான சீன தூதரகத்திற்கு அறிவித்துள்ளார். அவர்கள் பயன்படுத்திய உடை வௌிநாட்டு நிறுவன ஊழியர்கள் அணியும் உடை என சீன தூதரகம், பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளது இத்தகைய நிலைமை எதிர்காலத்தில் ஏற்படுவதை தவிர்க்குமாறு பாதுகாப்பு செயலாளர் சம்பந்தப்பட்ட உள்நாட்டு தனியார் நிறுவனத்தை தௌிவுபடுத்தியுள்ளார். அவ்வாறான எந்தவொரு முயற்சியையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பாதுகாப்பு செயலாளர் தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.