by Staff Writer 30-06-2021 | 3:26 PM
Colombo (News 1st) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மட்டக்களப்பு - கல்குடா பகுதியில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்கள் தொடர்பான சமர்ப்பணங்களை எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் M.H.M. பசீல் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, சந்தேகநபர்களின் வாகனங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அடையாளங்களை உறுதிப்படுத்தி சந்தேகநபர்களின் உறவினர்கள் வாகனங்களை கொண்டு செல்ல முடியும் என நீதவான் அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் வரை சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கொரோனா தொற்றுநிலை காரணமாக சந்தேகநபர்கள் எவரும் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவில்லை.
கல்குடாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை நினைவுகூர சிலர் முற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
வாழைச்சேனை, கல்குடா, கிரான் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.