கிளிநொச்சி கடலட்டை பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா  

கிளிநொச்சி கடலட்டை பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா  

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2021 | 6:13 pm

Colombo (News 1st) உரிய அனுமதியின்றி இலங்கை – சீன கூட்டு நிறுவனத்தால் கிளிநொச்சி – கௌதாரிமுனை, கல்முனையில் உள்ள அட்டைப்பண்ணை எவ்வித இடையூறுமின்றி இயங்கி வருகின்றது.

இந்த பண்ணை குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று (30) மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் கிளிநொச்சி கௌதாரி முனைக்கு சென்றிருந்தார்.

கௌதாரிமுனை – கல்முனையில் இலங்கை – சீன கூட்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள இந்த அட்டைப் பண்ணைக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியது.

எனினும், இன்றும் அந்த பண்ணை எவ்வித இடையூறுகளுமின்றி இயங்கி வருவதை காண முடிகிறது.

குருநகரில் இருந்து மீனவர் சங்க உறுப்பினர்களுடன் சென்று குறித்த பண்ணையை பார்வையிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பின்வருமாறு தெரிவித்தார்,

இது எவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுகின்றது, எங்கு கொண்டு செல்லப்படுகின்றது என்பது எல்லாம் கேள்விக்குட்படுகின்ற விடயம். பாரியளவில் கடலட்டைகள் இங்கு ஏற்றுமதிக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கடல் பகுதி இலங்கையின் தொல்பொருள் அடையாளம் கொண்ட, மூத்த குடிகள் வாழ்ந்த இடம். இது இறால் உற்பத்திக்கு பெயர்பெற்ற இடம். கௌதாரி முனை மக்களும் பாசையூர் மக்களும் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள்

இதேவேளை, இந்த பண்ணை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

குறித்த சீன – இலங்கை கூட்டு நிறுவனம் அரியாலையில் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை நடத்திச் செல்வதற்கு தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் பெற்றுக்கொண்ட அனுமதியை பயன்படுத்தி இந்த பண்ணையை நடத்திச் செல்கின்றமை தெரியவந்துள்ளது.

தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை ‘குயிலன்’ தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதிப் பத்திரத்திற்கு அமைய, 899.9 சதுர மீட்டரில் சுமார் 70,000 அட்டைக் குஞ்சுகளை விருத்தி செய்வதற்கான அனுமதியே வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நிலையத்தில் விருத்தி செய்யப்படுகின்ற அட்டைக் குஞ்சுகளை கௌதாரிமுனை – கல்முனை பகுதியில் உள்ள பண்ணையில் வளர்க்கும் செயற்பாடு அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது.​

முறையான அனுமதியின்றி இலங்கை கடலில் சீன பிரஜைகள் கடலட்டை பண்ணையை நடத்தி வருகின்றமை பல்வேறு கேள்விகளுக்கு வித்திடுகின்றது.

குயிலன் தனியார் நிறுவனத்தின் நிறுவன பதிவிற்கு அமைய, அதன் பணிப்பாளர்களாக இலங்கையை சேர்ந்த H.M.தம்மிக்க டி சில்வா, சீனா​வை ​சேர்ந்த ஸிச்சாஓ லீ மற்றும் யுஆன் ச்சன் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரியாலையிள்ள குயிலன் தனியார் நிறுவன கடலட்டை இனப்பெருக்க நிலைய பெயர் பலகையில் முகாமையாளர் என குறிப்பிடப்பட்டுள்ள கே.வி. ஶ்ரீ கணேசா என்பவர் நல்லூர் பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினராவார்.

இதேவேளை, சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த கடலட்டை பண்ணை தொடர்பாக மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்த அப்போதைய அரசாங்கத்திடம் அவசியமான அனுமதிகளைப் பெற்றுக்கொண்ட குறித்த சீன நிறுவனம், அரியாலை பகுதியில் கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையம் ஒன்றினை ஆரம்பித்ததாக கடற்றொழில் அமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது கௌதாரி முனையில் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்ந்து பூரணமான அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்