கொரோனா நோயாளர்களை வீடுகளில் பராமரிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் 

by Staff Writer 28-06-2021 | 5:39 PM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்களை வீடுகளிலேயே பராமரிப்பதற்கான விசேட செயற்றிட்டத்தை சுகாதார அமைச்சு இன்று (28) முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையில் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தத்தமது வீடுகளிலேயே கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி பராமரிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. அத்துடன், பிரதேசத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ், நோயாளிகளை வகைப்படுத்தி வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வீடுகளில் வைத்து கண்காணிக்கக்கூடிய நோய் அறிகுறிகள் தென்படாத அல்லது குறைந்தளவிலான நோய் அறிகுறிகளை கொண்ட கொரோனா நோயாளிகளின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ளது. வீடுகளில் வைத்து பராமரிப்பதற்கான கொரோனா நோயாளிகளை தெரிவுசெய்வதற்காக, விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியர் குழுவினால் நாளாந்தம் தொலைபேசியூடாக ஆராயப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் நோய் அறிகுறி உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட வருத்தம் கூடிய நோயாளர்கள் மற்றும் ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கும்போது முன்னுரிமையளிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா நோயாளிகளை வீடுகளிலேயே வைத்து பராமரிக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.