மக்கள் சக்தி மெய்நிகர் பள்ளி நாளை அங்குரார்ப்பணம்​

மக்கள் சக்தி மெய்நிகர் பள்ளி நாளை (28) அங்குரார்ப்பணம்

by Staff Writer 27-06-2021 | 8:24 PM
Colombo (News 1st) மக்கள் சக்தியின் மற்றுமொரு செயற்பாடான மாணவர்களுக்கான இலவசக் கல்வியை மேம்படுத்தும் திட்டம் நாளை (28) ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பாடசாலை கல்வி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இணையக்கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இணையத்தள வசதியில்லாத பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் தங்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு தீர்வாக மக்கள் சக்தியினால் முதற்கட்டமாக இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு ​தோற்றவுள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாட்டை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மக்கள் சக்தி மெய்நிகர் பள்ளி நாளை காலை 06 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. வார நாட்களில் காலை 6 மணி முதல் சக்தி TV-யிலும் அதன் மறு ஔிபரப்பு மாலை 6 மணிக்கு TV1 அலைவரிசையிலும் ஔிபரப்பப்படவுள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல், செயன்முறை பயிற்சிகள் ஆகியன பிரபல்யமான ஆசிரியர்களைக் கொண்டு தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. கற்பித்தல் நடவடிக்கைகளின் போது மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை தௌிவுபடுத்துவதற்கான கையேடுகள், மக்கள் சக்தி ​மெய்நிகர் பள்ளியினூடாக விநியோகிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.