சேதனப் பசளை தொடர்பான தீர்மானம் மாற்றப்படாது

சேதனப் பசளை பயன்பாடு தொடர்பான தீர்மானம் எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றப்படாது: ஜனாதிபதி

by Staff Writer 27-06-2021 | 6:41 PM
Colombo (News 1st) ஆரோக்கியமான எதிர்கால சந்ததிக்காக, சேதனப் பசளையை பயன்படுத்துவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றப்படாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். சேதனப் பசளை பாவனை தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் போது, விவசாயிகளை சிரமங்களுக்குள்ளாக்க இடமளிக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். இரசாயன உர பாவனையினால் பல பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் சிறுநீரக நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரசாயன உர கொள்வனவிற்காக அரசாங்கத்தினால் வருடாந்தம் 400 மில்லியன் டொலர் செலவிடப்படுகின்றது. இந்நிலையில், வௌிநாட்டு நிறுவனமொன்றினால் பெற்றுக்கொள்ளப்படும் பணத்தை, நாட்டின் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பம் சேதனப் பசளை பாவனையூடாக கிடைக்குமென மகா சங்கத்தினருக்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.