இலங்கை அணி குறித்து மிக்கி ஆர்தர் ஆராய வேண்டும்

இலங்கை கிரிக்கெட் அணி குறித்து மிக்கி ஆர்தர் விரிவாக ஆராய வேண்டும் என்கிறார் சங்கக்கார

by Staff Writer 27-06-2021 | 8:18 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணி குறித்து விரிவாக ஆராய வேண்டிய நிலை தலைமை பயிற்றுநரான மிக்கி ஆர்தருக்கு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதன் பின்னர் அவர் இதனைக் கூறினார். 2019 ஆம் ஆண்டு தசுன் சானக்க தலைமையில் பாகிஸ்தானில் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடருக்கு பின்னர் இலங்கை அணி தொடர்ச்சியாக நான்கு தொடர்களில் தோல்வியடைந்துள்ளது. இந்த வரலாற்றை குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை குழாம் இங்கிலாந்தில் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை. தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்களால் வெற்றியீட்டியதுடன், இரண்டாவது போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டி தொடரை தன்வசப்படுத்தியது. நேற்று (26) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து 85 ஓட்டங்களால் வெற்றியீட்டி இருபதுக்கு 20 தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. மூன்றாவது போட்டியில் 181 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய இலங்கை அணியின் 8 துடுப்பாட்ட வீரர்களால் 10 ஓட்டங்களையேனும் கடக்க முடியவில்லை. போட்டியில் இலங்கை அணி பெற்ற 91 ஓட்டங்களில் 16 உதிரி ஓட்டங்கள் உள்ளடங்குகின்றன. மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடர் தோல்விக்கு பின்னர் அத்தொடரில் விளையாடிய மூன்று வீரர்களை அணயில் இருந்து நீக்கிய தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு எதிர்வரும் உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடரை இலக்காகக் கொண்டு குசல் ஜனித் பெரேரா தலைமையிலான குழாமை பங்களாதேஷ் தொடருக்கு பெயரிட்டது. இலங்கை அணியின் பணிப்பாளராக செயற்படும் அவுஸ்திரேலியாவின் டொம் மூடி, பிரதான பயிற்றுநரான மிக்கி ஆர்த்தர், துடுப்பாட்ட பயிற்றுநரான கிரேண்ட் ப்ளவர் உள்ளிட்ட வௌிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பை பெறும் இலங்கை அணி, 35 வருட கிரிக்கெட் வரலாற்றில் பெருந்தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார தெரிவித்ததாவது,
திறமைகளை வேகமாக வளர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் உள்ளது. எனினும், அதற்கான மனநிலையை வளர்த்துக்கொள்வதே சிரமமான காரியம். அதனையே வேகமாக மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். சர்வதேச மட்டத்தில் விளையாடும் போது முதல்தர தொடர்களைப் போல செயற்பட முடியாது. 19 வயதிற்குட்பட்ட மற்றும் கழக மட்ட தொடர்களில் அதற்கான திறனை வளர்த்துக்கொண்டிருக்க வேண்டும். கடந்த மூன்று வருடங்களாக காணப்படும் இந்த பின்னடைவு, இந்த தொடரில் அதிகளவு வெளிப்பட்டிருந்தது. வீரர்கள் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடினார்கள். எனினும், பந்து மட்டையில் படவில்லை.. எனவே பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டிய நிலை மிக்கி ஆர்த்தருக்கு ஏற்பட்டுள்ளது.