ஜனாதிபதி 6 பிரச்சினைகளுக்கான தீர்வைக் கூற வேண்டும்

ஜனாதிபதி தனது உரையில் 6 முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்க வேண்டும்: சஜித் பிரேமதாச கோரிக்கை

by Bella Dalima 25-06-2021 | 2:19 PM
Colombo (News 1st) ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை நிகழ்த்தும் போது, எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ள 6 முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டிலுள்ள மக்கள் விசேடமாக எதிர்நோக்குகின்ற 6 பிரச்சினைகளுக்கான தீர்வினை ஜனாதிபதியின் விசேட உரையில் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையுள்ள அனைவரும் எரிபொருள் விலையேற்றத்தினால் இன்னல்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர். ஜனாதிபதியின் விசேட உரையின் ஊடாக எரிபொருள் விலையினைக் குறைத்து பழைய நிலைக்கே எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தமக்குள்ளதாக சஜித் பிரேததாச குறிப்பிட்டார். உரப் பற்றாக்குறையினால் அனைத்து விதமான செய்கைகளிலும் ஈடுபடுகின்ற விவசாயிகளும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, உரப் பாவனையை மாற்றுவதற்கு கிரமமாக செயற்திறனுடன் கூடிய உறுதியான செயற்திட்டமொன்றை ஆரம்பித்து அடுத்து வரும் போகங்களில் உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இலவசமாக உரத்தினை வழங்குவதற்கான திடசங்கற்பத்தை இன்றைய உரையின் ஊடாக ஜனாதிபதி பூணுவார் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் சஜித் பிரேததாச தெரிவித்தார். கப்பலின் அழிவின் ஊடாக நாடளாவிய ரீதியிலுள்ள மீனவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். எவரும் எதிபார்க்காத வகையில் பாரிய சுற்றாடல் அழிவு ஏற்பட்டுள்ளது. குறைந்தளவான நிவாரணத்திற்கு மீனவர்களை மட்டுப்படுத்தாமல், அரசாங்கம் மத்தியஸ்தம் வகித்து இந்த அழிவிலிருந்து மீனவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அழிவடைந்த சுற்றாடல் கட்டமைப்பினை மீண்டும் பேணி பாதுகாப்பதற்கான நிலையான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இன்று ஒன்லைன் கல்வி முறைமை பாடசாலை செல்கின்ற மாணவர்களுக்கு மாத்திரமன்றி ஆசியர்களுக்குமே நெருக்கடியை தோற்றுவித்துள்ளதாக குறிப்பிட்ட சஜித் பிரேதமதாச, மாணவர்களுக்கான உபகரணங்கள் கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். AstraZeneca இரண்டாவது தடுப்பூசி இல்லாமல் 6 இலட்சம் பேர் இன்று நிர்க்கதியாகியுள்ளதாகவும் அரசாங்கம் நிர்ணயித்த இலக்கான 160 இலட்சம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்குவதாகக் கூறிய விடயம் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். இன்று பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியினை மக்கள் எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில், வெறுமனே 5000 ரூபாவினை மாத்திரம் பெற்றுக்கொடுத்துவிட்டு ஆறுதலடைய முடியாது. ஆகவே, சிதைந்துபோயுள்ள வாழ்வாதரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்வார் என எதிர்பார்ப்பதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.