by Bella Dalima 25-06-2021 | 9:33 AM
Colombo (News 1st) இலங்கை அணியுடனான T20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது T20 போட்டி, இலங்கை நேரப்படி நேற்றிரவு 11 மணிக்கு கார்டிவ் மைதானத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்றது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணதிலக்க 3 ஓட்டங்களுடனும் அவிஷ்க பெர்னாண்டோ 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க , அதனை அடுத்து களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் அணி சார்பில் ஓரளவு ஓட்டங்களை குவித்தனர்.
குசல் பெரேரா 21 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
4 வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களையே பதிவு செய்தனர்.
பந்துவீச்சில் மார்க் வுட் மற்றும் ஆதில் ரஷீட் ஆகியோர் தலா 2 விக்கட்களை கைப்பற்றினர்.
எனினும், போட்டியின் இடைநடுவில் மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லூயிஸ் அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு 18 ஓவர்களில் 103 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அணி சார்பில் லியம் லிவிங்ஸ்டன் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
ஜோனி பெயார்ஸ்டோவ் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார்.
போட்டியில் இங்கிலாந்து அணி 16.1 ஓவரில் 5 விக்கட்டுகளை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இதன்மூலம் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.