இந்திய கடற்படை கப்பல் கொழும்பை வந்தடைந்தது

இந்திய கடற்படையின் அதிநவீன கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது 

by Staff Writer 25-06-2021 | 9:51 PM
Colombo (News 1st) இராணுவச் சீருடையை ஒத்த ஆடையுடன் சீனப் பிரஜைகள் தெற்கில் குளத்தைத் தூர் வாரும் நிலையில், இந்திய கடற்படையின் அதி நவீன கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. INS Sarvekshak எனப்படும் இந்தக் கப்பல், புதிய தொழில்நுட்ப கண்காணிப்பு வசதியைக் கொண்டுள்ளது. சமுத்திர வளத்தை மிகவும் துல்லியமாக கண்காணிக்கும் வல்லமை இந்தக் கப்பலிலுள்ளது. அத்துடன், X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்தக் கப்பல் வந்துள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனிடையே இலங்கைக் கடற்படை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படைகள் இணைந்து கிழக்கு கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ''ஒத்துழைப்புத் தயார்ப்படுத்தல் மற்றும் பயிற்சி'' தொடர்பில் நடத்தப்படும் இந்த கடற்பயிற்சியில் அமெரிக்க கடற்படையின் USS சார்ள்ஸ்டன் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் Destroyer ரக JDS Yugiri கப்பல் மற்றும் MH - 60R ரக ஹெலிகொப்டர் ஆகியனவும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையின் சயூர மற்றும் கஜபாஹூ கப்பல்களும் ஆழமான கடற்பகுதியைக் கண்காணிக்கும் கப்பல், இலங்கை விமானப் படையின் பெல் 212, பெல் 412 ரக ஹெலிகொப்டர்கள், பீ 200 ரக கண்காணிப்பு விமானங்கள் ஆகியனவும் இந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கூட்டுப்பயிற்சி நடவடிக்கை இம்மாதம் 30 ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகம் மற்றும் கிழக்குக் கடற்பரப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.