ஆய்வறிக்கை பெறுமாறு நீதவான் உத்தரவு

ஹிக்கடுவயில் கரையொதுங்கிய கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகளை ஆய்விற்குட்படுத்துமாறு நீதவான் உத்தரவு

by Staff Writer 24-06-2021 | 5:06 PM
Colombo (News 1st) ஹிக்கடுவ பகுதியை அண்மித்து கரையொதுங்கிய கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் நீரின் மாதிரிகளை தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் நாரா நிறுவனத்திற்கு அனுப்பி, ஆய்வறிக்கையை பெறுமாறு காலி பிரதம நீதவான் இன்று உத்தரவிட்டார். ஹிக்கடுவ தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரிக்கு காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த கடல்வாழ் உயிரினங்களின் உயிரிழப்பிற்கு கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலிலிருந்து வௌியாகும் இரசாயனம் காரணமா என்பதை உறுதி செய்வதற்காக ஆய்வறிக்கையை பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் 08 கடலாமைகளும் இரண்டு டொல்பின்களும் கரையொதுங்கியுள்ளன. இரத்மலானை, கல்கிசை, கட்டுகுருந்த, அங்குலான, சிலாபம், முந்தல் - சின்னப்பாடு ஆகிய பகுதிகளில் கடலாமைகளின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன. வென்னப்புவ மற்றும் உல்ஹிட்டியாவ பகுதிகளில் இரண்டு டொல்பின்களின் உடல்களும் இன்று கரையொதுங்கியுள்ளன.