ஜப்பான், அமெரிக்க கடற்படையினருடன் கூட்டுப் பயிற்சி

நவீன போர்க்கப்பல்களுடன் ஜப்பான், அமெரிக்க கடற்படையினர் திருகோணமலையில் கூட்டுப் பயிற்சி

by Staff Writer 24-06-2021 | 7:47 PM
Colombo (News 1st) இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை மற்றும் ஜப்பானின் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணி ஆகியன இணைந்து நடத்தும் கடற்பயிற்சி, திருகோணமலை கடற்படைத் தளத்தில் இன்று ஆரம்பமானது. இந்த கூட்டு கடற்பயிற்சி, திருகோணமலை துறைமுகம் மற்றும் திருகோணமலையை அண்மித்த கிழக்குக் கடற்பரப்பில் ஜூன் 30 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது. திருகோணமலை கடற்படைத் தளத்தில் இந்த பலதரப்பு கடற்பயிற்சி நடவடிக்கை இன்று ஆரம்பமானது. கடற்படையின் பிரதித் தலைவர் மற்றும் கடற்படையின் கிழக்கு கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் Y.N. ஜயரத்ன ஆகியோரின் தலைமையில் இது ஆரம்பமானது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் கடல்சார் ஆலோசகர், தூதரக அதிகாரிகள்  உள்ளிட்டோர் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர். சமுத்திரத் தலையீடு மற்றும் உள்ளக நடவடிக்கைகளை மேம்படுத்தல், பொதுவான சமுத்திர சவால்களில் இணைதல், சமுத்திர நடவடிக்கை தொடர்பில் முழுமையான புரிதலைப் பெற்றுக்கொள்ளல், சமுத்திரப் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான நெருக்கமான இயலுமையை மேம்படுத்தல், சர்வதேச சட்டம், தரத்திற்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியன தொடர்பில் இதன்போது அதிகக் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதனிடையே, சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் தரப்புகள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தல், இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை மற்றும் ஜப்பான் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணி ஆகிய தரப்புகளிடையேயான தொடர்பை மேம்படுத்தல் ஆகியனவும், CARAT–21 என பெயரிடப்பட்டுள்ள இந்த கடற்பயிற்சி மூலம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் துறைமுகம் தொடர்பான கட்டம் இன்றும் நாளையும் திருகோணமலை துறைமுகத்தில் நடத்தப்படுகின்றது. அத்துடன், கடல்சார் கட்டம் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை திருகோணமலையை அண்மித்த கிழக்கு கடற்பரப்பில் நடத்தப்படவுள்ளது. இதனைத் தவிர, இந்தப் பயிற்சியின் போது மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணத் திட்டமிடல், சமுத்திரம் தொடர்பான புரிதல், சமுத்திர விமான நடவடிக்கை, கப்பல்களுக்கு இடையே கடலில் பொருட்களைப் பரிமாற்றுதல், எதிரிக் கப்பல்களைப் பின்தொடர்தல், கப்பலுக்குள் பிரவேசித்தல், சோதனை செய்தல் மற்றும் விடுவித்தல் ஆகிய விடயங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. COVID-19 தொற்றைத் தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை கடற்படையின் சயூர மற்றும் கஜபாஹூ கப்பல்களும் ஆழமான கடற்பகுதியைக் கண்காணிக்கும் கப்பல், இலங்கை விமானப் படையின் Bell  212, Bell 412 ரக ஹெலிகொப்டர்கள், கண்காணிப்பு விமானங்கள் ஆகியனவும் இந்தப் பயிற்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளன. அத்துடன், ஐக்கிய அமெரிக்க கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி Littoral Combat ரக USS Charleston கப்பல், Boeing P-8 Poseidon ரக சமுத்திரப் பாதுகாப்பு விமானம்,  MH-60S ரக ஹெலிகொப்டர் ஆகியனவும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஜப்பானின் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, Destroyer ரக JDS Yugiri கப்பல் மற்றும் MH - 60R ரக ஹெலிகொப்டர் ஆகியன ஈடுபடுத்தப்படவுள்ளன.    

ஏனைய செய்திகள்