சீன பிரஜைகள் அணிந்துள்ள உடை தொடர்பில் CID விசாரணை

திஸ்ஸ வாவியை தூர் வாரும் சீன பிரஜைகள் அணிந்துள்ள உடை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

by Staff Writer 24-06-2021 | 7:20 PM
Colombo (News 1st) திஸ்ஸமகாராம வாவியை தூர் வாருவதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டத்தில் சீன இராணுவ சீருடையை ஒத்த உடையணிந்து பணியாற்றும் சீன பிரஜைகள் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகிறது. இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற இடத்தை கண்காணித்த புலனாய்வுப் பிரிவினர் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்ததாக இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் சீன இலங்கை கூட்டு நிறுவனத்தின் பொது முகாமையாளர் துசித்த பலல்ல கூறினார். சீன இராணுவ சீருடையை ஒத்த உடையணிந்து திஸ்ஸமகாராம வாவியில் சேற்று மண்ணை அகழும் சீன பிரஜைகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வௌியிட்டது. நேற்று மாலை நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் குறித்த இடத்திற்கு சென்றிருந்த போது சர்ச்சையை ஏற்படுத்தியருந்த குறித்த ஆடையணிந்திருந்த எவரையும் காண முடியவில்லை.   இந்த வேலைத் தளத்தில் கடந்த சில நாட்களாக சீன பிரஜைகள் அணிந்திருந்த குறித்த உடையை அவர்கள் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளரிடம் காண்பித்தனர். இதனை கண்காணித்தபோது, பொதுவாக இராணுவ சீருடையில் சின்னங்கள் மற்றும் குறியீடுகளுக்காக  ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளை இந்த உடையிலும் காண முடிந்தது. இந்த விடயம் தொடர்பில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேர்ணல் சன்ன கருணாரத்ன பின்வருமாறு தௌிவுபடுத்தினார்
இரண்டு நாடுகளுக்கு இடையே இராணுவ இனக்கப்பாடுகள் இல்லாமல் எவ்வித காரணத்திற்காகவும் இராணுவ சட்டத்தின் கீழ் வேறு ஒரு நாட்டில் செயற்படுவதற்கான அதிகாரம் கிடையாது. அவர்கள் சீருடையுடன் உத்தியோகபூர்வ பணியில் ஈடுபடுவார்களாயின் இந்தளவு படையினரை நாம் அழைத்து வருகின்றோம் என அவர்கள் எமது நாட்டிற்கு அறிவிக்க வேண்டும். இங்கு வாவியை தோண்டுவதற்கு இராணுவத்தினர் தேவைப்படுகின்றனரா? இங்கு வந்துள்ளவர்கள் இராணுவத்தினரா? அரசாங்கம் இது தொடர்பில் தௌிவுபடுத்த வேண்டும். சீனாவுடன் கதைத்து தௌிவான அறிவிப்பை வௌியிட வேண்டும்
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டர் பதிவினூடாக தொடர்ச்சியாக பதில் வழங்கி வருகிறது. செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சீன இராணுவ உறுப்பினர்கள் அல்ல என்பதையும், அத்தகைய ஆடையை அணிந்துள்ளவர்கள் தொழிலாளர்கள் என்பதையும் அறிந்துகொண்டே நியூஸ்ஃபெஸ்ட் திசை திருப்பும் வகையில் தலைப்பிட்டு செய்தி அறிக்கையிட்டுள்ளதாக சீன தூதரம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. இந்த ட்விட்டர் பதிவிற்கு நியூஸ்ஃபெஸ்ட் பதில் வழங்கியது. சீன தூதரம் கூறும் வகையில், செய்தி வௌியிடவில்லை எனவும் சீனாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அந்த சுதந்திரத்தை இலங்கையில் அனுபவித்து வருவதாகவும் பதிலில் சுட்டிக்காட்டியிருந்தது. 'நீங்கள் இலங்கையில் சுதந்திரத்தை அனுபவியுங்கள். எனினும், இலங்கையின் சட்டத்திற்கு மதிப்பளியுங்கள்' என நியூஸ்ஃபெஸ்ட் , இலங்கைக்கான சீன தூதரகத்திடம் வலியுறுத்தியது.

ஏனைய செய்திகள்