வாவி புனரமைப்பாளர்களின் ஆடை தொடர்பில் சர்ச்சை

திஸ்ஸமகாராம வாவி புனரமைப்பில் ஈடுபட்டுள்ளோரின் ஆடை தொடர்பில் சர்ச்சை 

by Staff Writer 24-06-2021 | 2:10 PM
Colombo (News 1st) திஸ்ஸமகாராம வாவியை புனரமைக்கும் செயற்றிட்டத்தில் பணியாற்றும் சீனப் பிரஜைகள், இராணுவத்தினருக்கான சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்துள்ளமை தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது தமது பிரிவினர் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டபோது எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை என குறித்த செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கான நிறுவனத்தின் பொது முகாமையாளர் துஷித பலல் குறிப்பிட்டார். இராணுவத்தினரின் சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்து திஸ்ஸமகாராம வாவியை புனரமைக்கும் செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பில் நாம் கடந்த சில தினங்களாக அறிக்கையிட்டு வருகின்றோம். எவ்வாறாயினும், நேற்று மாலை குறித்த இடத்திற்கு நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் சென்ற போது, அவ்வாறு சீருடை அணிந்த எவரையும் அங்கு காண முடியவில்லை. இராணுவத்தினர் அணியும் சீருடை மற்றும் இலட்சினை ஆகியவற்றை ஒத்ததாகவே செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ள சீனப் பிரஜைகள் அணிந்திருந்த ஆடைகளும் காணப்பட்டன. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டர் பதிவினூடாக தொடர்ச்சியாக பதில் வழங்கி வருகின்றது. செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சீன இராணுவ உறுப்பினர்கள் அல்ல எனவும் அவ்வாறான ஆடையை அணிந்துள்ளவர்கள் தொழிலாளர்கள் என அறிந்திருந்தும் திசை திருப்பும் வகையில் நியூஸ்பெஸ்ட் தலைப்புச் செய்தியாக அறிக்கையிடுவதாக சீன தூதரம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த ட்விட்டர் பதிவுக்கு நியூஸ்பெஸ்ட் பதில் வழங்கியது. சீன தூதரம் கூறும் வகையில் செய்தி வௌியிடவில்லை எனவும் சீனாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான சுதந்திரத்தை இலங்கையில் அவர்கள் அனுபவிப்பதாகவும் நாம் பதில் வழங்கியிருந்தோம். நீங்கள் இலங்கையில் சுதந்திரத்தை அனுபவியுங்கள். எனினும், இலங்கையின் சட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும் ட்விட்டர் தளத்தினூடாக சீன தூதரகத்திற்கு நாம் பதில் வழங்கினோம். நீர்ப்பாசன செழுமைத் திட்டத்தின் கீழ் ஹம்பந்தோட்டை திஸ்ஸமகாராம வாவியை தூர்வாறும் பணி கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. துறைசார் அமைச்சரின் தலைமையில் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சீனாவின் பங்காளி நிறுவனத்துடன் இணைந்து இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.