பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகள் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகள் விடுதலை

by Staff Writer 24-06-2021 | 1:47 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேர் இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இவர்கள் 16 பேர் அடங்கலாக, 28 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 93 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 பேரும் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, காங்கேசன்துறை மற்றும் மாத்தளை பகுதிகளை சேர்ந்தவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் நீண்ட காலம் விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறினார். இவர்களின் தண்டனைக் காலத்தில் உரிய முறையில் புனர்வாழ்வுக்கான பயிற்சிகளை இவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இவர்களை தவிர சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்த 77 கைதிகளும் இன்று ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீடுகளில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.