ஹெரோயினுடன் கைதான மூவருக்கு விளக்கமறியல்

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 24-06-2021 | 4:09 PM
Colombo (News 1st) களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குனுவல சந்தேகநபர்களுக்கு இன்று விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார். 50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இதுவரை தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவு பெறவில்லை என போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு இன்று அறிக்கை சமர்ப்பித்தனர். சந்தேகநபரான உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் இதற்கு முன்னரும் சீருடையுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைத்ததன் பின்னர், ஏனைய சந்தேகநபர்களை தனியாக வைக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தனர். இந்த போதைப்பொருள் கடத்தலுடன் வௌிநாடுகளில் உள்ளவர்கள் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிப்பதால், தொலைபேசி அழைப்பிற்கான தரவுகளை வழங்குமாறு குறித்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் தொலைபேசி அழைப்புகளுக்கான தரவுகளை பெற்றுக்கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்