அம்பர்கிரிஸ் கடத்த முயன்ற 6 பேர் கைது

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அம்பர்கிரிஸ் கடத்த முயன்ற 6 பேர் கைது

by Bella Dalima 23-06-2021 | 7:43 PM
Colombo (News 1st) தமிழகத்தின் திருச்செந்தூரிலிருந்து இலங்கைக்கு அம்பர்கிரிஸை ( Ambergris) கடத்த முயன்ற 6 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். திமிங்கிலத்தின் வாந்தியான அம்பர்கிரிஸ் விலையுயர்ந்த வாசனைத் திரவிய தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், சர்வதேச ரீதியில் அதற்கு சிறந்த கேள்வி நிலவுகிறது. தமிழக பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இரண்டு கோடி இந்திய ரூபா பெறுமதியான அம்பர்கிரிஸ் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட 2 கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸ் இலங்கையினூடாக மலேசியாவிற்கும் அங்கிருந்து இங்கிலாந்திற்கும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக கடத்தல்காரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பொருளாக அம்பர்கிரிஸ் விளங்குகின்றது. எங்கிருந்து அம்பர்கிரிஸ் பெறப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மேலதிக பரிசோதனைகளுக்காக இதனை ஹைதராபாத்திலுள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.