சம்பந்தனுக்கு ஜனாதிபதி கடிதம்

சம்பந்தனுக்கு ஜனாதிபதி கடிதம்; சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்

by Staff Writer 23-06-2021 | 6:50 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இன்று (23) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நியூஸ்ஃபெஸ்டுக்குத் தெரிவித்தார். வெகு விரைவில் சந்திப்பிற்கான திகதியை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அறிவித்துள்ளார். இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பில் விடயங்கள் இடம்பெறும் போது, தமது கட்சி அது குறித்து முடிவெடுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. அமைச்சர் உதய கம்பன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தராமையினால், உத்தியோகபூர்வமாக பாராளுமன்றக் குழுக் கூட்டத்தை நடத்த முடியாமல் போனதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.