லொறி சாரதி கொலை: கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்

வியாழேந்திரன் வீட்டின் முன்பாக லொறி சாரதி சுட்டுக்கொலை: பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல் 

by Staff Writer 22-06-2021 | 9:22 PM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக நேற்று (21) நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 14 நாட்கள் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 35 வயதான ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெற்றன. மட்டக்களப்பு - ஊறணி, மன்ரேசா வீதியிலுள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியோழேந்திரனின் இல்லத்திற்கு முன்பாகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நேற்று மாலை 5.10 அளவில் இடம்பெற்றிருந்தது. சம்பவ இடத்திற்கு இன்று காலை வருகை தந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி A.C.ரிஸ்வான் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 35 வயதான மகாலிங்கம் பாலசுந்தரம் என்ற லொறி சாரதி உயிரிழந்தார். குறித்த சாரதி முச்சக்கர வண்டியில் நேற்று மாலை இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு அருகாமையில் பயணித்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவரின் உறவினர்களும் ஊராரும் இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக, நேற்றிரவு ஒன்றுகூடி எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. பின்னர் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதை அடுத்து எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் லொறி சாரத்திக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.