இலங்கை -இந்திய வெளியுறவு அமைச்சர்கள் கலந்துரையாடல்

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: இலங்கை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துரையாடல்

by Staff Writer 22-06-2021 | 10:13 PM
Colombo (News 1st) வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கலந்துரையாடியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வெளி விவகார அமைச்சருடன் தொலைபேசியில் நேற்று (21) கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் சீனாவின் முதலீட்டில் கொழும்பு துறைமுக நகரம் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த கலந்துரையாடல் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார். இரு நாடுகளினதும் நல்லுறவுகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது மறு ஆய்வு செய்யப்பட்டதாகவும் BIMSTEC மற்றும் IORA உள்ளிட்ட கூட்டு நாடுகளுக்கிடையிலான செயலாக்கம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் இந்தியா வலுவான நட்புறவில் தொடர்ந்தும் இருக்கும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கையின் திட்டங்களில் சீனா பங்கேற்றிருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என இந்திய கடற்படையின் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் அசோக் குமார் தெரிவித்துள்ளார். இந்தியா தமது சமுத்திரப் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, அமெரிக்காவிடமிருந்து நவீன தொழில்நுட்பத்துடனான, போர்த்தளவாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.