by Staff Writer 22-06-2021 | 9:39 AM
Colombo(News 1st) எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்பெஸட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
கோட்டையிலுள்ள கட்சியின் தலைமையகத்திலிருந்து பாராளுமன்ற கட்டடத் தொகுதி வரை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணித்தவாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதனிடையே எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் களனி பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று முற்பகல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது .
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஜோர்ஜ் பெரேரா தலைமையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
எரிபொருளின் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து யட்டியாந்தோட்டை நகரிலும் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
மீனவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் வெலிகம கப்பரதொட பகுதியிலும் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை, புத்தளம் கல்பிட்டி பகுதியிலும் மீனவர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்த போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்கப்பட்டது.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் செவனகல டன்தும முச்சந்தியில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும் குறித்த பகுதிக்கு மோட்டார் வாகனத்தில் வருகை தந்த குழுவினர், எதிர்ப்பு நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததை அடுத்து எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது.