எரிபொருள் விலையேற்றத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி பேரணி; நாடளாவிய ரீதியில் மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்

by Staff Writer 22-06-2021 | 8:19 PM
Colombo (News 1st) எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று பேரணியாக பாராளுமன்றத்திற்கு சென்றிருந்தனர். இந்த எதிர்ப்புப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை ஆரம்பமானது. பொல்துவ சந்தியின் ஊடாக பயணித்த வாகனப் பேரணி பாராளுமன்ற நுழைவாயிலை சென்றடைந்தது. பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகாமையில் கூடிய உறுப்பினர்கள் அங்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேவேளை, எரிசக்தி அமைச்சர் சட்டத்தரணி உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. சபாநாயகரின் அலுவலகத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது. இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யட்டியாந்தோட்டை பிரதேச சபையின் எதிரக்கட்சி உறுப்பினர்கள் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யட்டியாந்தோட்டை பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை அடுத்து எதிர்ப்பினை தெரிவிக்கும் நோக்கில் பஸ் நிலையத்திலிருந்து யட்டியாந்தோட்டை பிரதேசசபை வரை கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் நடந்து சென்றனர். மாத்தளை நகர் பகுதியிலும் எரிபொருள் விலையேற்றத்தை குறைக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த கவனயீர்ப்புப் ​போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். கற்பிட்டி கண்டல்குழி பகுதியிலும் எரிபொருள் விலையினை குறைக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது. மீனவர் இறங்குதுறை பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, எரிபொருள் விலையினை உடனடியாகக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மக்கள் விடுதலை முன்னணி இன்று அம்பாறையிலும் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. அம்பாறை நகரிலும் இன்று எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த மற்றுமொரு எதிர்ப்பு நடவடிக்கை எல்பிட்டியவில் இன்று முன்னெடுக்கப்பட்டது. எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு மேலதிகமாக உரத் தட்டுப்பாட்டையும் சுட்டிக்காட்டி மாத்தளை நகரில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கினிகத்தேனை நகரிலும் மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. கட்டுகஸ்தோட்டையிலும் கம்பஹா ரயில் நிலையத்திற்கு முன்பாகவும் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. பதுளையில் ஊவா மாகாண சபை கட்டடத்திற்கு முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கைக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தலைமைதாங்கினார். இந்நிலையில், எரிபொருள் விலையேற்றத்தைப் போன்று சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திடம் இருந்தபோதிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பினால், அரசாங்கத்திற்கு அதனை நீக்கிக்கொள்ள வேண்டி ஏற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட நாளில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி அந்த தீர்மானத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மீளப்பெறும் வரை இந்த ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.